Tuesday, 21 May 2013


வார்த்தைகளில்
முட்கள் கோர்க்கப்பட்டு
வீசப்படுகின்றன.
மாதவிடாய்க் குருதிபோல்
சொட்டுகிறது என் மனச்சீழ்.
என்னுள் ஊதப்பட்ட உயிர்க்காற்று
என் ஆத்மசுடரை அணையவிடாமல்
மேலும் மேலும்
ப்ரகாசிக்கச் செய்கிறது.
இறுதியில்
இரத்தமும் நிணமுமாய்
பனிக்குடத்திலிருந்து வெளிவரும்
சிசு போல
அவமானங்களை விட்டும்
காழ்ப்புகள் களைந்தும்
புதுப்பிறப்பெடுக்கிறேன்......

Wednesday, 8 May 2013

ஒரு பறவையின் கீச்சுகள்



வனாந்திரங்களில் யுகம் யுகமாகப் 
பறந்து திரிந்த பறவைகள் 
கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.
கூண்டுப் பறவைகளுக்குச் சிறகெதற்கு?
கூண்டிலடைக்கப்பட்டாலும் அவ்ற்றின் மனச்சிறகுகள்
பறத்தலை நிறுத்துவதேயில்லை.

மொத்த வாழ்க்கையையும் குரலாகவே அனுபவிக்கப் பழகுகின்றன.
ஓர் அன்பின் நேசம் குரலாகவே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒரு வெற்றியின் சாகசம் குரலாகவே எதிரொலிக்கப்படுகிறது.
ஒரு பிரிவாற்றாமையின் கண்ணீர் குரலாகவே வழிகிறது.
ஒரு முத்தத்தின் ஈரம் குரலால் ஸ்பரிசிக்கப்படுகிறது.
கடந்து செல்லும் ஒரு சோக நிகழ்விற்கு

கனத்த மெளனக்குரல் கதறத்தொடங்குகிறது.

கூண்டுப்பறவைகள் நிலம் திரும்புகையில்
புலன்களனைத்தையும் கூர்தீட்டிக்கொள்கின்றன.
சிறகுகளின் வண்ணங்களும் ப்ரகாசிக்கத் தொடங்குகின்றன.
நெடுந்தொலைவு கடந்து தரையிறங்கும் கணத்தில்
சிறிது தடுமாறத்தான் செய்கின்றன.....
கனவுலகின் நிஜவெளியைக் காணநேரும்போது....
பொளதீக வடிவிலான அன்பின் தரிசனத்தால் நிலைகுலைந்துபோகின்றன.
அது ஒரு ஜென்தருணம்.

கூண்டுப்பறவைகள் அந்திமக்காலங்களில் அதன் கடவுச்சீட்டை
சிறகுகள் முளைக்கத்தொடங்கிய
தன் குஞ்சுகள் வசம் ஒப்படைக்கத் தவறுவதேயில்லை.
அந்த்த்தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல் பெற்றுக்கொள்கின்றன

 கூண்டின் வெறுமையறியாக் குஞ்சுகள்.
ஜென்ம சாபல்யம்..........அது எப்படி
ஒரு நிலத்தின் பறவையனைத்திற்கும்
கூட்டுமனம் , பொதுப்புத்தி ஒரே வழித்தடத்தில்
பயணம் மேற்கொள்கிறது.....ஆராய்ச்சிக்குரிய விஷயம்.....

நித்தம் நீர்த்துறைகளில் துள்ளித்திரிந்த சில பறவைகள்
நீரற்ற பாலையின் புதைமணலில் அமிழ்கின்றன.
தானே தானேமெ லிக்கா ஹ கானே வாலெக்கா நாம்.
அவற்றிற்கான அரிசி இங்குதான் முளைக்கிறது போலும்.
பறவைகளின் வேடந்தாங்கலாக பத்ஹாக்களும்...பலத்களும்....
சில பறவைகள் அடையாளமிழந்து தலைமறைவாகின்றன.
சில பறவைகள் மூன்றாம் தலைமுறை
அலைக்கற்றைகளிடம் அன்யோன்மாகின்றன.
சில பறவைகள் முகநூலிலயே கெடையாய்க் கிடக்கின்றன.
சில பறவைகள் ஸ்கைப்பில் தஞ்சமடைகின்றன.
வெகு சில பறவைகளுக்கே கொல்லும் தனிமை
விருப்பத்தேர்வாகயிருக்கிறது...

LIKE




உன் நிலைத்தகவலை விரும்ப
ஆசையாகயிருக்கிறது
அதேசமயம் பயமாகவும்.
எனைப்பற்றியான பிம்பங்கள்
உடைந்துவிடக்கூடுமென்ற
பதைபதைப்பும் கூட.
இருந்தும்
மொழியைக் கையாளும் உன் லாவகமா?
சொற்களில் த்வனிக்கும் ஓசைநயமா?
சொல்லவந்த கருத்தினில் உள்ளுறையும் அறமா?
அவை உதித்த இதயம்மீதான ப்ரியமா?
எதுவோ ஒன்று
என் நெஞ்சில் விழுந்து
மெளசையும் அழுத்திவிடுகிறது
Like ல்.....

என்றும் உள்ளுக உயர்வுள்ளல்


Photo: கணங்கள்தோறும் 
ப்ரபஞ்ச இயக்கத்தின் உந்துசக்தியாய்
எதிர்பார்ப்புகளே முன்னிற்கின்றன......... 

மலரிதழில் தேனுறுஞ்ச காடெங்கும் அலைகிறது தேனீ..
கண்கள் விரிய தனது எண்ணைத் தேடுகிறான் பள்ளி மாணவன்
எதிர்காலக்கனவுகளோடு ஏறிஅமர்கிறான் மீசைஅரும்பிய சிறுவன்
திருவனந்த்புரம் நோக்கி விரைகிறது அம்பாசிடர் கார்..
கவிந்தமாலையில் பூச்சூடி கதவோரம்சாய்ந்து நிற்கிறாள் புதுமனைவி
இழந்த ராணியை மீட்க இறுதிக்கட்டம் நோக்கி நகர்கிறது சிப்பாய்..
பாரதியின் சந்தத்தோடியைந்த எழுச்சிமிக்க வரிகளைப்போல்
ஒரு வரியாவது எழுதிவிட பசிகொள்கிறான் ஒரு புதுக்கவிஞன்... 

"மச்சி நாளைக்கு இன்னேரம்லாம் ...."என்று
கண்களாலே சிரிக்கிறான் வெகேஷன் ஜானேவாலா தோஸ்த்..
மின்னல் கீற்றல்களுகிடையில் நம்பிக்கைஒளியை
தலை உயர்த்திப்பார்க்கிறான் ஒரு விவசாயி........
அரங்கேற்றத்திற்காக அலங்கரிக்கப்படுகின்றன ஒரு ஜோடிக்கண்கள்....
சின்ன சின்ன ஆசையுடன் 
ஏலேலோ...பாடத்தொடங்குகிறான் ஒரு இசைக்கலைஞன்......


எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்தாலும்...
விதியின் பாதை
விழிகளுக்குத் தென்படாவிட்டாலும்
என்றும் உள்ளுக உயர்வுள்ளல்..................


கணங்கள்தோறும் 
ப்ரபஞ்ச இயக்கத்தின் உந்துசக்தியாய்
எதிர்பார்ப்புகளே முன்னிற்கின்றன. 

மலரிதழில் தேனுறிஞ்ச காடெங்கும் அலைகிறது தேனீ.
கண்கள் விரியத் தனது எண்ணைத் தேடுகிறான் பள்ளி மாணவன்.
எதிர்காலக்கனவுகளோடு ஏறிஅமர்கிறான் மீசைஅரும்பிய சிறுவன்
திருவனந்தபுரம் நோக்கி விரைகிறது அம்பாசிடர் கார்.
கவிந்தமாலையில் பூச்சூடி கதவோரம்சாய்ந்து நிற்கிறாள் புதுமனைவி
இழந்த ராணியை மீட்க இறுதிக்கட்டம் நோக்கி நகர்கிறது செஸ் சிப்பாய்.
பாரதியின் சந்தத்தோடியைந்த எழுச்சிமிக்க வரிகளைப்போல்
ஒரு வரியாவது எழுதிடப் பசிகொள்கிறான் ஒரு புதுக்கவிஞன்.

"மச்சி நாளைக்கு இன்னேரம்லாம் ...."என்று
கண்களாலே சிரிக்கிறான் வெகேஷன் ஜானேவாலா தோஸ்த்.
மின்னல்கீற்றுகளுகிடையே நம்பிக்கைஒளியை
தலை உயர்த்திப்பார்க்கிறான் ஒரு விவசாயி.
அரங்கேற்றத்திற்காக அலங்கரிக்கப்படுகின்றன ஒரு ஜோடிக்கண்கள்.
சின்னச்சின்ன ஆசையுடன் ஏலேலோ 

பாடத்தொடங்குகிறான் ஓர் இசைக்கலைஞன்.


எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்தாலும்,
விதியின் பாதை
விழிகளுக்குத் தென்படாவிட்டாலும்,
என்றும் உள்ளுக உயர்வுள்ளல்...