Wednesday, 8 May 2013

ஒரு பறவையின் கீச்சுகள்



வனாந்திரங்களில் யுகம் யுகமாகப் 
பறந்து திரிந்த பறவைகள் 
கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.
கூண்டுப் பறவைகளுக்குச் சிறகெதற்கு?
கூண்டிலடைக்கப்பட்டாலும் அவ்ற்றின் மனச்சிறகுகள்
பறத்தலை நிறுத்துவதேயில்லை.

மொத்த வாழ்க்கையையும் குரலாகவே அனுபவிக்கப் பழகுகின்றன.
ஓர் அன்பின் நேசம் குரலாகவே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒரு வெற்றியின் சாகசம் குரலாகவே எதிரொலிக்கப்படுகிறது.
ஒரு பிரிவாற்றாமையின் கண்ணீர் குரலாகவே வழிகிறது.
ஒரு முத்தத்தின் ஈரம் குரலால் ஸ்பரிசிக்கப்படுகிறது.
கடந்து செல்லும் ஒரு சோக நிகழ்விற்கு

கனத்த மெளனக்குரல் கதறத்தொடங்குகிறது.

கூண்டுப்பறவைகள் நிலம் திரும்புகையில்
புலன்களனைத்தையும் கூர்தீட்டிக்கொள்கின்றன.
சிறகுகளின் வண்ணங்களும் ப்ரகாசிக்கத் தொடங்குகின்றன.
நெடுந்தொலைவு கடந்து தரையிறங்கும் கணத்தில்
சிறிது தடுமாறத்தான் செய்கின்றன.....
கனவுலகின் நிஜவெளியைக் காணநேரும்போது....
பொளதீக வடிவிலான அன்பின் தரிசனத்தால் நிலைகுலைந்துபோகின்றன.
அது ஒரு ஜென்தருணம்.

கூண்டுப்பறவைகள் அந்திமக்காலங்களில் அதன் கடவுச்சீட்டை
சிறகுகள் முளைக்கத்தொடங்கிய
தன் குஞ்சுகள் வசம் ஒப்படைக்கத் தவறுவதேயில்லை.
அந்த்த்தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல் பெற்றுக்கொள்கின்றன

 கூண்டின் வெறுமையறியாக் குஞ்சுகள்.
ஜென்ம சாபல்யம்..........அது எப்படி
ஒரு நிலத்தின் பறவையனைத்திற்கும்
கூட்டுமனம் , பொதுப்புத்தி ஒரே வழித்தடத்தில்
பயணம் மேற்கொள்கிறது.....ஆராய்ச்சிக்குரிய விஷயம்.....

நித்தம் நீர்த்துறைகளில் துள்ளித்திரிந்த சில பறவைகள்
நீரற்ற பாலையின் புதைமணலில் அமிழ்கின்றன.
தானே தானேமெ லிக்கா ஹ கானே வாலெக்கா நாம்.
அவற்றிற்கான அரிசி இங்குதான் முளைக்கிறது போலும்.
பறவைகளின் வேடந்தாங்கலாக பத்ஹாக்களும்...பலத்களும்....
சில பறவைகள் அடையாளமிழந்து தலைமறைவாகின்றன.
சில பறவைகள் மூன்றாம் தலைமுறை
அலைக்கற்றைகளிடம் அன்யோன்மாகின்றன.
சில பறவைகள் முகநூலிலயே கெடையாய்க் கிடக்கின்றன.
சில பறவைகள் ஸ்கைப்பில் தஞ்சமடைகின்றன.
வெகு சில பறவைகளுக்கே கொல்லும் தனிமை
விருப்பத்தேர்வாகயிருக்கிறது...

No comments:

Post a Comment